Thursday, February 21, 2019

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கலைஞ்சரால் மட்டுமே சாத்தியம்

21    வன்னிய உயிர்கள் யாரால் பலியானது?
20% வன்னியர் இட ஒதுக்கீடு யாரால் சாத்தியமானது?

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது, ஆனால் அண்ணா அறிவாலயத்துக்கும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கும் நேரடி சம்பந்தம் உண்டு என்பது மட்டும் ஐயம் திரிபர எனக்கு தெரியும்.

1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ம் தேதி தான் திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயம் சென்னையில் திறந்து வைக்கப்பட்டது . வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக நடத்தப்பட்ட ஒரு வார தொடர்சாலை மறியல் போராட்டமும் கூட அதே தினத்தில் தான், 1987 செப்டம்பர் 16 ம் தேதி இரவில் தான் தொடங்கியது. முக்கிய பாலங்கள் சேதப்படுத்தப்பட்டு, பெரிய மரங்கள் எல்லாம் வெட்டி நடு ரோட்டில் சாய்க்கப்பட்டு , எல்லா முக்கிய சாலைகளும் போராட்டகாரர்களால் முடக்கப்பட்டது .

அறிவாலய திறப்பு விழா முடிந்து ஊர் திரும்பிய பல திமுக தொண்டர்கள் ஊர் திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனர். பலரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வன்னிய சமுதாயத்தால் மறக்கவே முடியாத அந்த ஒரு வார மறியல் போராட்டத்தால் சென்னை தென்மாவட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டது, வட மாவட்டங்களில் வாகனப்போக்குவரத்து முற்றிலும் இல்லாமல் போனது.

இட ஒதுக்கீடு போராட்டத்தை காது கொடுத்து கேட்க தயாராக இல்லாத எம்ஜிஆர் அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அதை அடக்கியது. 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபின் தான் அந்தப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

ராமதாசுக்கு மட்டும் முக்கியத்துவம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த எம்ஜிஆர் , போராடும் ராமதாசை மட்டும் கூப்பிட்டு பேசாமல் , அனைத்து சமூக தலைவர்களின் மாநாட்டை கூட்டி , உங்கள் சமூகத்தின் மக்கள் தொகை என்ன , எவ்வளவு இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்டார்.

அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன மக்கள் தொகையின் கூட்டுத்தொகை , தமிழ்நாட்டு மக்களின் ஜனத்தொகையை விட அதிகம் வந்தததை சாக்காக வைத்து , "எல்லோரும் போயிட்டு வாங்க , மக்கள் தொகை கணக்கை சரி பார்த்துட்டு மறுபடியும் கூப்பிடறேன்"னு எல்லோரையும் திருப்பி அனுப்பிவிட்டார். கூப்பிட்டு வைச்சு கலாய்ப்பது என்போமே அது தான் எம்ஜிஆர் அன்றைக்கு செய்தது.

எல்லா சமூக தலைவர்களும் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு ஊர் போய் சேர்ந்தனர். வன்னியர்களின் இட ஒதுக்கீடு கோரிக்கை கிணற்றில் போடப்பட்ட கல்லாய்ப்போனது.

கல்லான அகலிகைக்கு ராமனால் உயிர் வந்ததைப்போல , எம்ஜிஆர் ஆட்சியில் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருந்த வன்னியர்களின் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு கலைஞரால் உயிர் வந்தது .
1989 ல் தான் ஆட்சிக்கு வந்த 60 வது நாளில் , வீரபாண்டி ஆறுமுகம் மூலமாக ராமதாசை அழைத்து பேசி 20 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி அந்த புகழில் ராமதாசுக்கும் பங்கு கொடுத்தார் என்பது வரலாறு .

கலைஞர் தந்த அந்த இரவல் புகழில் தான் , இடஒதுக்கீடு வந்த 4 வது மாதத்தில் பாமக என்ற கட்சியையே தொடங்கினார் ராமதாஸ். கடைசி வன்னியன் இருக்கும் வரை மறந்து போக முடியாத இந்த இடஒதுக்கீடு போராட்டம் நடந்த நேரத்தில் , 21 உயிர்கள் பலியான நேரத்தில், வன்னிய சமூகத்தின் போராட்ட புண்ணுக்கு இடஒதுக்கீடு என்ற அருமருந்தை கலைஞர் தடவிய நேரத்தில் , அந்த 1987 - 1989 காலகட்டங்களில் எல்லாம் , தானுண்டு தன் லஞ்ச் பாக்ஸ் உண்டு என மருத்துவக்கால்லூரியில் எம்பிபிஎஸ் படித்துக்கொண்டிருந்த அந்த அன்புமணி ராமதாஸ் இப்போது ஆடம்பரமாக கூட்டம் போடுவதும், “அன்புமணி ஆகிய நான்” என்று முழங்குவதும், முதல்வராகவேண்டும் என்று ஆசைப்படுவதையும் காலத்தின் கோலம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல முடியும்.

தங்களுக்கு சேவை செய்தவர் தங்களின் தலைவராக வரவேண்டும் என்பதை விட , தங்கள் சமூகத்திலிருந்து வந்தவர் தான் தங்கள் தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கும்வரை இந்த தமிழகம் முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

             ---- சூர்ய தேவன்

https://m.facebook.com/DMK.IT.WING.MDU.CITY.SOUTH/photos/a.167698357397903/186026228898449/?type=3

No comments:

Post a Comment